7 கிராமங்களை சேர்ந்த 3,880 பேர் பயன் 4 அரசு டவுன் பஸ்களின் வழித்தடம் நீட்டிப்பு

*அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் 7 கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட 3,380 பேர் பயன்பெறும் வகையில், 4 அரசு டவுன் பஸ்களின் வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், 4 அரசு டவுன் பஸ்களின் வழித்தடத்தை நீட்டிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு, எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு, டவுன் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கிருஷ்ணகிரி டவுன் பஸ் (எண்-கே.59), தற்போது இயங்கும் வழித்தடம் கிருஷ்ணகிரி, மேல்நூக்கி (வழி) ஆலப்பட்டி, சிக்கப்பூவத்தி செல்லும் பஸ், இனி மேல்நூக்கியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் போது, சி.கெட்டூர் ஊருக்குள் சென்று பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, சிக்கபூவத்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வரை, காலை மற்றும் மாலை பள்ளி நேரத்திற்கு வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், டவுன் பஸ் (எண்-கே.52) பஸ், தற்போது காவேரிப்பட்டணத்தில் இருந்து அவதானப்பட்டி கோயில் வழியாக கிருஷ்ணகிரிக்கு சென்று வருகிறது.

போடரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள், மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்ப ஏதுவாக வழி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி டவுன் பஸ் கிளைக்குட்பட்ட அரசு டவுன் பஸ் எண் டி24பி பஸ், தற்போது தர்மபுரியில் இருந்து செம்மனஹள்ளி, பெரமாண்டப்பட்டி வழியாக இ.அக்ரஹாரத்திற்கு சென்று வருகிறது. இனிவரும் காலங்களில் இ.அக்ரஹாரத்தில் இருந்து திருவனம்பட்டிக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் செல்லும் வகையில் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஊத்தங்கரை கிளை மூலம் இயஙக்கும் வண்டி (எண்-யு14) பஸ், தற்போது ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டை, அந்திப்பாடி வழியாக நீப்பத்துறைக்கு சென்று வந்து கொண்டிருந்தது. இனி ஊத்தங்கரையில் இருந்து மதியம் மற்றும் மாலை நேரத்தில் குன்னத்தூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வரும் நேரத்திற்கு செல்ல ஏதுவாக வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 7 கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 3,880 பேர் பயன்பெறுவார்கள். மேலும், இங்குள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை, சரியான நேரத்திற்கு நகர பகுதிக்கு கொண்டு சென்று மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து பயன் பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா, கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு, அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் செல்வம், துணை மேலாளர்கள் ராஜராஜன், மோகன்குமார், கோட்ட மேலாளர் தமிழரசன், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, முன்னாள் எம்பி., சுகவனம், முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், முருகன், தடங்கம் சுப்பிரமணி, கிளை மேலாளர்கள் இளங்கோவன், இளங்கோவன், தாசில்தார் சம்பத் மற்றும் போக்குவரத்துறை கழக பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post 7 கிராமங்களை சேர்ந்த 3,880 பேர் பயன் 4 அரசு டவுன் பஸ்களின் வழித்தடம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: