நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் இன்று காலை திடீரென பொருட்கள் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். ரயிலில் வைத்து சமையல் செய்யும் போது காஸ் வெடித்து தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில்கள் மற்றும் பயணிகளிடம் தற்போது தீவிர சோதனை நடந்து வருகிறது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல கூடாது என்பது தொடர்பாக பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் இறங்கி உள்ளது. போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் முன்புற பகுதியில் உள்ள ஒரு அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்ததும் வெளியே நின்று கொண்டிருந்த பயணிகள், ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்து தகவல் மையத்தில் இருந்த ஊழியருக்கு தெரிவித்தனர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அறை கதவை உடைத்து திறந்த போது, பிளீச்சிங் பவுடர், கழிவறை தூய்மைக்கான கெமிக்கல் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து ெகாண்டிருந்தன.
தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை வீரர்கள் அணைத்தனர். அரை மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக கெமிக்கல் எதிலும் தீ பிடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம்சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post நாகர்கோவில் ரயில் நிலையத்தில் திடீர் தீ: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.
