என்னை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர்கள் மாணவர்கள்தான்: கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ருசிகரம்

சென்னை: கோயம்பேடு, தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய, ஊக்கம் தரக்கூடிய வகையில் என்னை இயக்கிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் யார் என்று கேட்டால், மாணவர்களும், இளைஞர்களும்தான். எனவே, மாணவ மாணவிகள் நிரம்பியிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில், உங்களிடையே இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற என்னுடைய தமிழ்நாட்டின் விடியலுக்கான முழக்கத்தை, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

அந்த அடிப்படையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், இந்த பேச்சு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி, அதில் மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியிருக்கிறோம். ஆனால், இந்த பேச்சு போட்டிகளின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள இளம் பேச்சாளர்களைத்தான் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு என்றுதான் நான் சொல்லுவேன். ஏனென்றால், பேச்சுக்கலை என்பது எல்லோருக்கும் எளிய வகையில் வந்துவிட முடியாது. பேச்சாற்றலால் நம் தமிழ் நிலம் பண்படுத்தப்பட்ட வரலாற்றை நீங்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும்.

அதனை எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். டி.எம். நாயரின் ‘ஸ்பர்டாங்க்’ உரைபோல், உங்களது உரைகள் வருங்காலங்களில் பலருக்கும் கையேடாக இருந்துவிட வேண்டும். திராவிட இயக்கம் என்பதே பேசிப் பேசி வளர்ந்த இயக்கம். திராவிட இயக்கம் என்பதே எழுதி எழுதி வளர்ந்திருக்கக்கூடிய இயக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுக கூட்டங்களை ‘மாலை நேர கல்லூரிகள்’ என்று அழைப்பதுண்டு. அந்தளவிற்கு அறிவாற்றல், சொல்லாற்றல் அதில் அடங்கியிருக்கும். பகுத்தறிவு கருத்துகளை பட்டெனச் சொல்லும் நம்முடைய பெரியார். அவர் இந்த சமுதாயத்திற்காக என்னென்ன கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பது இதன்மூலமாக நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.

அதேபோல், உலக அரசியலையெல்லாம் தன் மயக்கும் மொழியாலேயே சொல்லி அறிவூட்டியவர் யார் என்றால், அண்ணா. அடுக்குமொழியிலும் கனல் தெறிக்கக்கூடிய வசனங்கள் பேசி தமிழர்களுக்கு உணர்ச்சியை ஊட்டியவர் யார் என்றால், இன்றைக்கு நூற்றாண்டு விழா காணக்கூடிய நம்முடைய கலைஞர். இப்படி அவர்களை எல்லாம் வழிகாட்டிகளாக கொண்டு நம்முடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் மாணவ – மாணவிகளை கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களிடம் நான் வேண்டுகோளாக வைப்பதெல்லாம், நம்முடைய தமிழ்நாட்டுக்கு என்று தனி குணம் உண்டு. சமத்துவம் – சகோதரத்துவம் – சமூகநீதி – சுயமரியாதை – பகுத்தறிவு என்று பண்பட்ட பண்பாட்டை கொண்ட நம் தமிழ் மண்ணின் உணர்வை நீங்கள் அனைவரும் பெற வேண்டும். ஒற்றுமையோடு வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி நமது சமூகத்தை வழிநடத்த வேண்டும். மனிதநேயத்தை போற்றுங்கள். உங்கள் எண்ணங்களை அழுக்காக்கும் கருத்தியல்களை புறந்தள்ளுங்கள். நல்லிணக்கத்தின் பண்பை மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள் என்று இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post என்னை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர்கள் மாணவர்கள்தான்: கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ருசிகரம் appeared first on Dinakaran.

Related Stories: