பொன்னமராவதி அமரகண்டான் குளத்தில் மண்டிக்கிடந்த கோரை புல் அற்றும் பணி தீவிரம்

பொன்னமராவதி,ஆக.22: பொன்னமராவதி அமரகண்டான் குளம் மேம்பாடு செய்யும் ஒரு அங்கமாக மண்டிக்கிடக்கும் கோரை புல்லை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. திருமயம் சட்டமன்றத்தொகுதியின் பெரிய நகரமாக பொன்னமராவதி விளங்குகிறது. இங்கு பொழுபோக்குவதற்கு எந்த இடமும் இல்லை. இங்கு புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கூடும் பகுதியாக உள்ளது. பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அமரகண்டான் குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்குபுறம் காவல்நிலையம், சிவன்கோயில், பத்திர எழுத்தர்கள் அலுவலகம் உள்ளது. தெற்குப்புறம் பட்டமரத்தான் கோயில், பத்திர பதிவு அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், தபால்நிலையம், நூலகம், பெட்ரோல் பங்கு, கிழக்குப்புறம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் கடைகள் என நான்கு புறமும் முக்கிய அலுவலகம், கோயில்கள் என உள்ளது.

இப்பகுதி ஒரு சிறப்பு மிக்க பகுதி. இந்த குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் இடிந்து கிடந்தன. மேலும் ஊரின் மையப்பகுதியில் அழகாக இருக்க வேண்டிய குளம் தூய்மையற்ற நிலையில் இருந்தது. இந்த குளத்தை சீர் செய்து நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இப்பகுதியில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லை. எனவே இந்த குளத்தைச்சுற்றி பூங்கா அமைத்து நடைபயிற்சி பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நீண்ட கால கோரிக்கையினை கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் ரகுபதி இதனை செய்வதாக வாக்குறுதியளித்திருந்தார். தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரான ரகுபதி இந்த குளத்தை மேம்பாடு செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி இந்த அமரகண்டான் குளத்தை மேம்பாடு செய்து குளக்கரைகளில் கல்பதித்து நடைபாதை அமைக்க ரூ 1.39 கோடி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து இந்த குளம் மேம்பாடு செய்யும் பணி தொடங்கப்பட்டது. மண் அள்ளப்பட்ட சுற்றுச்சுவர் பணி முடிந்து கரைகளில் கல்பதிக்கப்பணி திவிரமாக நடைபெற்ற வருகின்றது. இன்னும் கொஞ்சப்பகுதிகளே கல் பதிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் குளத்தில் செடிகள், தேவையற்ற கோரைபுல் மண்டுக்கிடந்தது. இதனை பொக்லேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கல் பணி முடிந்த பின்னர் பேவர் பிளாக் அமைத்து பூங்கா அமைக்கப்படும். அனைத்துப்பணிகளும் முடிந்த பின்னர் பொன்னமராவதி நகரின் அழகு பகுதியாக இந்த பகுதி உருவாக்கப்படும் என பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் இந்தபணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதி அமரகண்டான் குளத்தில் மண்டிக்கிடந்த கோரை புல் அற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: