சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நம்பர் 1 அல்காரசை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்: மகளிரில் கோகோ காப் பட்டம் வென்றார்

சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் 20 வயது கார்லஸ் அல்காரஸ், 2ம் நிலை வீரரான செர்பியாவின் 36 வயதான ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டை அல்காரஸ் 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் கடும் போட்டி நிலவியது. டைப்ரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7(9)-6(7) என ஜோகோவிச் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டிலும் இருவரும் மாறிமாறி பாயின்ட் எடுக்க டைப்ரேக்கர் வரை சென்றது. இதனை 7(7)-6(4) என ஜோகோவிச் கைப்பற்றினார். முடிவில் அவர் 7-5, 7(9)-6(7), 7(7)-6(4) என வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 3 மணி 48 நிமிடம் இந்த போட்டி நடந்தது.

இந்த வெற்றி மூலம் விம்பிள்டன் பைனலில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டார். வெற்றிக்கு பின் அவர் ஆக்ரோஷமாக தனது டீ சர்ட்டை கிழித்துக்கொண்டார். 1000 தரவரிசை புள்ளி கொண்ட சர்வதேச தொடரில் இது அவருக்கு 39வது பட்டமாகும். 23 கிராண்ட்ஸ்லாம், 6 ஏடிபி பைனல்ஸ் தொடர் சாம்பியன் என அவர் ஒட்டுமொத்தமாக 68 பட்டம் வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் 7ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 19 வயதான கோகோ காப், 10ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் 27 வயது கரோலினா முச்சோவா மோதினர். இதில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கோகோ காப் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட டென்னிஸ் தொடர் ஒன்றில் இது அவருக்கு முதல் பட்டமாகும். குறைந்த வயதில் சின்சினாட்டி பட்டம் பெற்ற வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும் கடைசி 3 தொடரில் 2வது பட்டம் வென்றுள்ளார். பட்டம் வென்ற ஜோகோவிச் மற்றும் கோகோ காப்பிற்கு ரூ.8.48 கோடியும், பைனலில் தோல்வி அடைந்த அல்காரஸ், முச்சோவாவிற்கு 4.63 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நம்பர் 1 அல்காரசை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்: மகளிரில் கோகோ காப் பட்டம் வென்றார் appeared first on Dinakaran.

Related Stories: