தந்தை ராஜிவ் பிறந்தநாளை கொண்டாட லடாக்கில் பைக்கில் சென்ற ராகுல் காந்தி

புதுடெல்லி: தந்தை ராஜிவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிடித்தமான லடாக் பாங்காங் ஏரிக்கு ராகுல் காந்தி பைக்கில் பயணித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக் சென்றுள்ளார். காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, ராகுல் லடாக் சென்றிருப்பது இதுவே முதல் முறை. லடாக்கின் லே நகரில் நேற்று முன்தினம் இளைஞர்களுடன் உரையாடிய ராகுல், கால்பந்து விளையாட்டிலும் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நேற்று அவர் லடாக்கின் பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றார். தனது டிவிட்டரில் ராகுல் பதிவிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகின. ராகுலின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் இன்று. தந்தையின் பிறந்தநாளை கொண்டாடவே ராகுல், பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றுள்ளார்.

இதைப் பற்றி டிவிட்டரில் குறிப்பிட்ட ராகுல், ‘‘எனது தந்தை அடிக்கடி கூறுவார், உலகிலேயே மிக அழகான இடம் பாங்காங் ஏரி என்பார். எனவே அவரது பிறந்தநாளை அங்கேயே சென்று கொண்டாட உள்ளேன். ஏற்றமோ, இறக்கமோ தடுக்க முடியாதது!’’ என பதிவிட்டுள்ளார். மேலும், ராகுல் தனது கேடிஎம் 390 பைக்கில் ஹெல்மெட் கிளவுஸ், ரைடிங் பூட்ஸ், ஜாக்கெட் என சகல பாதுகாப்புடன் பயணித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் பைக் மெக்கானிக்களிடம் பேசிய ராகுல், தன்னிடம் கேடிஎம் 390 பைக் இருப்பதாகவும் அதை ஓட்ட பாதுகாவலர்கள் அனுமதிப்பதில்லை எனவும் கூறியிருந்தார். அந்த புத்தம் புதிய பைக்கில் தான் லடாக்கில் அவர் பயணித்துள்ளார். இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 155 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.

The post தந்தை ராஜிவ் பிறந்தநாளை கொண்டாட லடாக்கில் பைக்கில் சென்ற ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: