4 நாட்களில் 157% அதிக மழை!: இமாச்சலில் பெய்து வரும் கனமழையால் உயிரிழப்பு 62 ஆனது.. 7 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது.. மக்கள் தவிப்பு..!!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சம்மர் ஹில் என்ற மலைப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 8 பேரின் உடல்களை மீட்க இயலாமல் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் போராடி வருகின்றனர். இதனிடையே மாநிலம் முழுவதும் நிலச்சரிவால் இறந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. மலை பிரதேசங்களான இமாச்சல பிரதேசத்தையும், உத்திராக்கண்ட்டையும் அதி கனமழை உருக்குலைத்து வருகிறது. குறிப்பாக சில வார இடைவெளியில் இமாச்சல பிரதேசம் மீண்டும் பெரும் சேதத்தை சந்தித்து வருகிறது.

மாண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துவிட்டனர். நேற்று முன்தினம் இமாச்சலில் உள்ள சம்மர்ஹில் என்ற மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் மண்ணில் புதைந்துவிட்டனர். இவர்களில் இன்று காலை மீட்கப்பட்ட ஒருவரின் சடலத்தை சேர்த்து 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 8 பேரின் சடலங்களை மீட்க முடியாமல் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர். இமாச்சலில் கடந்த 4 நாட்களில் மட்டும் 157 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தமுள்ள 1220 சாலைகளில் 400 சாலைகள் மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளன. நேற்று இமாச்சலின் கிருஷ்ணாநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் ஹெலிகாப்டரை மீட்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

The post 4 நாட்களில் 157% அதிக மழை!: இமாச்சலில் பெய்து வரும் கனமழையால் உயிரிழப்பு 62 ஆனது.. 7 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது.. மக்கள் தவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: