கோவை: கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, நேற்று தனது தொகுதிக்குட்பட்ட அன்னூர், கணேசபுரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் சென்னை செல்வதற்காக அவிநாசியில் இருந்து காரில் கோவை விமான நிலையம் நோக்கி பயணித்தார். அவரது கார் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே சென்றுக் கொண்டிருந்த போது முன்னாள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர் ஒருவர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியிருந்தார். இதை கவனித்த ஆ.ராசா, உடனடியாக காரில் இருந்து இறங்கி இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அத்துடன் தன்னுடன் வந்த மருத்துவர் கோகுலை இளைஞருடன் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இளைஞரின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்கக்கோரி கோவை விமான நிலையம் சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே விபத்தில் சிக்கிய இளைஞர் திருப்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவையில் நெகிழ்ச்சி!: சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய ஆ.ராசா; மனிதாபிமான செயலுக்கு குவியும் பாராட்டு..!! appeared first on Dinakaran.