ஆரோவில் சர்வதேச நகரத்தில் அரவிந்தர் பிறந்தநாள் விழா: அதிகாலையில் நெருப்பு மூட்டி உற்சாக கொண்டாட்டம்

வானூர்: புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் அரவிந்தர் பிறந்தநாள் விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் இயங்கி வருகிறது. அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்போன்சாவின் முக்கிய கனவு நகரமாக அவர் அமைக்க எண்ணியதின் விளைவாக கடந்த 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் இரும்பை, இடையன்சாவடி, பொம்மையார்பாளையம், குயிலாப்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட பகுதிகளின் மைய பகுதியில் ஆரோவில் அமைய வேண்டும் என்று கருதிய அன்னையின் விருப்பப்படி இந்தநகரம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆரோவில் உதயமாகி 55 ஆண்டுகள் ஆகிறது. இந்த பகுதியை எந்த நாட்டினரும், எந்த மதத்தினரும் சொந்தம் கொண்டாட முடியாத வகையில் அனைவருக்கும் பொதுவான இடமாக ஆரோவில் இருக்க வேண்டும் என்ற அன்னையின் விருப்பப்படி ஆரோவில் அமையப்பெற்றுள்ளது. இதன் முக்கிய பகுதியாக மாத்ரி மந்திர் என்ற தியானக்கூடம் விளங்குகிறது. தங்க உருண்டை வடிவில் அமைக்கப்பட்ட இந்த மாத்ரி மந்திர் ஆரோவில்லின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் பாரத்நிவாஸ், அரவிந்தர் சிலை நிறுவப்பட்டுள்ள சாவித்திரி பவன் ஆகியவையும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டது. மாத்ரி மந்திர் அருகே ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி கலையரங்கம் உள்ளது. இதன் மையப்பகுதியில் பல்வேறு நாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித மண் வைக்கப்பட்டு அது தாமரை மொக்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திறந்தவெளி கலையரங்கில் இன்று அதிகாலை 5 மணியளவில் அரவிந்தரின் பிறந்த நாள் மற்றும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக அதிகாலை முதலே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் என ஏராளமானோர் கூடினார்கள். பின்பு சூரிய உதயத்தின்போது அப்பகுதியில் நெருப்பு மூட்டி கொண்டாடினார்கள். மேலும் விளக்குகள் ஏற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

The post ஆரோவில் சர்வதேச நகரத்தில் அரவிந்தர் பிறந்தநாள் விழா: அதிகாலையில் நெருப்பு மூட்டி உற்சாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: