வள்ளிமலை முருகன் கோயிலில் 2ம் நாள் தெப்பல் உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம் ஆடி கிருத்திகையொட்டி பிரசித்தி பெற்ற

பொன்னை, ஆக.11: ஆடி கிருத்திகையொட்டி பிரசித்தி பெற்ற வள்ளிமலை முருகன் கோயிலில் 2ம்நாள் தெப்பல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நேற்றுமுன்தினம் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. இதேபோல் காட்பாடி தாலுகா பொன்னை அருகே பிரசித்தி பெற்ற வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் வெள்ளி கவசத்தில் விபூதி காப்பு அலங்காரத்திலும், தனி சன்னதியில் அருளும் வள்ளியம்மை சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர்.

ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் காவடி எடுத்து மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை தெப்பக்குளத்தில் நீராடி பக்திமுழக்கமிட்டபடி மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகையொட்டி 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முதல் நாளில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் உலா வந்தார். இந்நிலையில், 2ம் நாள் தெப்ப உற்சவம் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்ப உற்சவத்தை கண்டு மகிழ்ந்தனர். மேலும், வேலூர் சலவன்பேட்டை நாட்டியப்பள்ளியின் நாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று இரவும் தெப்பல் உற்சவம் நடக்கிறது.

The post வள்ளிமலை முருகன் கோயிலில் 2ம் நாள் தெப்பல் உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம் ஆடி கிருத்திகையொட்டி பிரசித்தி பெற்ற appeared first on Dinakaran.

Related Stories: