கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஆக.10: கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் கூடுதல் மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவிலில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் மிக குறைந்த அளவு நோயாளிகள் வந்து மருந்துகளை வாங்கிவிட்டு செல்லும் நிலை இருந்து வந்தது. தற்போது கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, மருத்துவ பிரிவு, கல்லூரி வகுப்புகள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பயின்று வருகின்றனர். பல்வேறு வகையான நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து தங்கி மருத்துவம் செய்வதற்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக இங்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சீட்டு எடுப்பதற்கும், மருத்துவரை சந்திப்பதற்கும், மருந்துகள் வாங்குவதற்கும் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒன்பது மருத்துவர்கள் இருக்கும் இடத்தில் 3 பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள இடங்களில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்களை வைத்து தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே இங்கு வரும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் சுரேஷ்ராஜன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: