மக்களவையில் ராகுல் காந்தி பேசியது 37 நிமிடங்கள்; நேரலையில் காட்டியதோ 14.37 நிமிடங்கள் மட்டுமே: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: மக்களவையில் பேசிய ராகுல் காந்தியை 14.37 நிமிடங்கள் மட்டுமே காட்டியதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி ராகுல் 37 நிமிடங்கள் பேசிய நிலையில் 14.37 நிமிடங்கள் மட்டுமே அவரை காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பேச்சால் பிரதமர் மோடி அச்சம் அடைந்துள்ளாரா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், மணிப்பூர் பற்றி மக்களவையில் ராகுல் காந்தி 15 நிமிடங்கள் 42 வினாடிகள் பேசியுள்ளார். மணிப்பூர் பற்றி ராகுல் பேசியபோது 11 நிமிடங்கள் 8 வினாடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவையே சன்சத் டிவி காட்டியது. மணிப்பூர் பற்றி 15 நிமிடங்கள் பேசியபோதிலும் அவரை 4 நிமிடங்கள் 34 வினாடிகள் மட்டுமே சன்சத் டிவி நேரலையில் ஒளிபரப்பு செய்தது.

மணிப்பூர் பற்றி ராகுல் பேசியபோது 71% நேரம் ஓம்பிர்லாவையே சன்சத் டிவி நேரலையில் காட்டியது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ராகுலை கண்டு பிரதமர் மோடி மட்டுமல்ல; ஒட்டுமொத்த பாஜகவே அரண்டு கிடக்கிறது. இந்திய மக்களுக்காக ராகுல் பேசுவதாலேயே அவரை கண்டு மோடியும் பாஜகவினரும் அஞ்சுகின்றனர். மணிப்பூரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஒன்றிய பாஜக தவறிவிட்டதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். சன்சத் டிவி நேரலையில் ராகுலை அதிக நேரம் காட்டினால் அவர்களது எஜமானர்களால் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் விமர்சனம் செய்தார்.

The post மக்களவையில் ராகுல் காந்தி பேசியது 37 நிமிடங்கள்; நேரலையில் காட்டியதோ 14.37 நிமிடங்கள் மட்டுமே: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: