கடலூர் அருகே கோண்டூர் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும்

*பொதுமக்கள் வலியுறுத்தல்

கடலூர் : கடலூர் அருகே உள்ள கோண்டூர் ஊராட்சியில் சமுதாய நல கூடம் மற்றும் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் அருகே உள்ள கோண்டூர் ஊராட்சி சின்ன தெரு மாரியம்மன் கோயில் அருகே பல ஆண்டுகளுக்கு முன் மக்களின் பயன்பாட்டுக்காக புதிதாக சமுதாய நலக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. இந்த சமுதாய நலக்கூடம் அந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர்கள் தங்கள் வீட்டில் நடக்கும் திருமணம் நிச்சயதார்த்தம், மஞ்சள் நீர் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை மிக குறைந்த செலவில் அங்கு நடத்தி வந்தனர். மேலும் மழை காலங்களில் குடிசையில் வாழும் மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அந்த சமுதாய நலக்கூடத்தை பராமரிக்காமல் விட்டதன் காரணமாக, தற்போது அது மிகவும் சேதமடைந்தது. இதனால் ஊராட்சி சார்பில் அந்த சமுதாய நலக்கூடம் இடித்து அகற்றப்பட்டது. இதன் பின்னர் பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த சமுதாய நலக்கூடத்தை கட்டி தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஒன்றிய குழு கூட்டத்தில் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோண்டூர் ஊராட்சியில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல அந்த பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இது கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், அது சேதம் அடைந்து காணப்படுகிறது. கான்கிரீட் தூண்களும், காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதற்காக அதன் அருகிலேயே புதிய குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டு ஒரு வருடமாகியும், இதுவரை புதிய குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதே போல அதன் அருகிலேயே பொது கழிவறை ஒன்றும் சேதம் அடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருக்கிறது. அதை இடித்து விட்டு புதிதாக கட்டி தர கோரியும் இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கோண்டூர் சின்ன தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அவர்களுக்கு வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற சிரமப்பட்டு வருகின்றனர்.

‘அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்’

கோண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி கூறுகையில், கோண்டூர் ஊராட்சியில் ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இதேபோல சமுதாய கூடம் கட்டுவதற்கும், குளம் தூர் வாருவதற்கும், வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அனைத்து பணிகளும் தொடங்கி, விரைவில் முடிக்கப்படும். இதேபோல புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் கோண்டூர் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும், என்றார்.

‘கூட்டத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை’

இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி சீனிவாசன் கூறும்போது, எங்கள் கோண்டூர் ஊராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. குறிப்பாக எங்கள் பகுதி மக்கள் ஏழை, எளிய மக்களாக இருக்கின்றனர். அன்றாட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் தங்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சமுதாய கூடம் கட்டி தர வேண்டும். அதேபோல சின்ன தெரு மற்றும் பெரிய தெருவில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லை. இது குறித்து பலமுறை ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தியும் இதுவரை கட்டி தரப்படவில்லை. எனவே. வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இதுபோல பொது கழிவறையும், புதிய மேல்நிலை நீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post கடலூர் அருகே கோண்டூர் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: