பென்னாலூர்பேட்டை கிராமத்தில் பாளையத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை: பென்னாலூர்பேட்டை ஸ்ரீ பாளையத்தம்மன் கோயில் தீமிதி விழாவில் கையில் குழந்தைகளுடன் பக்தர்கள் தீ மிதித்தனர். ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர் பேட்டை கிராமத்தில் கிராம தேவதையான ஸ்ரீ பாளையத்தம்மன் கோயில் 33ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல்நாள் காலை 8 மணிக்கு பால் குடம் மற்றும் சீர்வரிசை நிகழ்ச்சியும், 10 மணிக்கு பாலாபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இரண்டாம் நாள் காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மூன்றாவது நாளான நேற்று முன்தினம் காலை காப்பு கட்டுதல், கரகம் ஊர்வலம், கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் பொங்கல் படைத்தல் ஆகியவையும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் கையில் குழந்தையுடன் 150 பேர் தீமிதித்தனர். இதில் பெண்கள் அக்னி குண்டத்தை வலம் வந்து வழி பட்டனர். தீமிதி விழா முடிந்தவுடன் பாளையத்தம்மன் டிராக்டரில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதில் வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

The post பென்னாலூர்பேட்டை கிராமத்தில் பாளையத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: