திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா கோலாகலமாக தொடங்கியது: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், ஆடி அஸ்வினியுடன் ஆடி கிருத்திகை துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, முருகனை வழிப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை ஆடி அஸ்வினியுடன் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகள் சுமந்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று முன் தினம் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் உஷாராவி, மோகன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோயில் அதிகாரிகள் செய்துள்ளனர். விழாவையொட்டி மலைக்கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருத்தணி நகராட்சி சார்பில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தற்காலிக கழிப்பிடங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருத்தணி நகரத்தில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் தொற்றுநோய் பரவாமல் இருக்க கிருமி நாசினிகள் தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் குப்பைகளை அகற்றவும் தேவையான நடவடிக்கைகளை நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமிராஜ், நகராட்சி ஆணையர் அருள் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ், உதவி பொறியாளர் ராஜேந்திரன், மின்வாரிய ஊழியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

தீயணைப்புத் துறையினர் நல்லாங்குளம், சரவண பொய்கை பகுதிகளில் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தண்ணீரில் ரப்பர் படகுடன் தயார் நிலையில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிபாஸ் கல்யாண தலைமையில் டிஎஸ்பி விக்னேஷ், தமிழ் மாறன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைக்கோயில், தற்காலிக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தயாராக உள்ளனர்.

* டிரோன் மூலம் போக்குவரத்து கண்காணிப்பு

பக்தர்களின் பாதுகாப்பு குறித்து திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் கூறியதாவது: ஆடிக்கிருத்திகை ஒட்டி, 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை வாகனங்கள் திருத்தணி நகர எல்லை வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இதர வாகனங்கள் மேல்திருத்தணி, புதிய புறவழிச்சாலை, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பைபாஸ் ஆகிய இடங்கள் வரை அனுமதிக்கப்படும். ஆட்டோக்கள் மட்டும் திருத்தணி கமலாதியேட்டர் வரை அனுமதிக்கப்படும்.

பக்தர்களின் வசதிக்காக, 8 இடங்களில் மருத்துவ முகாம், 40 இடங்களில் கழிப்பறைகள், 120 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, நல்லாங்குளம், சரவணபொய்கை திருக்குளம், படா செட்டி குளம் ஆகிய இடங்களில் படகு சவாரி அமைத்து கண்காணிப்படுவர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து, 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மலைக்கோயிலில் மட்டும், 86 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர திருத்தணி நகரம் முழுவதும், 189 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மூன்று ‘டிரோன்’ கேமிரா மூலம் மேலே பறக்கவிட்டு உடனுக்கு உடன் போக்குவரத்து சீரமைக்கப்படும். பக்தர்களின் செயின், பணம் மற்றும் நகைகள் திருட்டை தடுப்பதற்கு, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், 40 போலீசார் மறுவேடத்தில் மலைக்கோயில் மற்றும் பக்தர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். திருத்தணி நகருக்குள் வாகனங்கள் வருவதை தடுக்கவும், கண்காணிக்கவும், மொத்தம் 238 சாலை தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபவர் என கூறினார்.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா கோலாகலமாக தொடங்கியது: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: