சிலாப் இடிந்து விழுந்த ரங்கம் கோயில் கோபுரத்தை அமைச்சர் நேரு பார்வையிட்டார்

திருச்சி, ஆக. 7: திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்குவாசல் கோபுரத்தில் இடிந்து விழுந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு வாசலில் சித்திரை வீதியையும் கீழஅடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் வகையில் உள்ள தாமோதர கிருஷ்ணன் நுழைவு வாயில் கோபுரத்தில் முதல் நிலையில் ஒரு சிலாப் (கொடுங்கை), 2 ம் நிலையில் ஒரு சிலாப் இருந்தது. முதல் நிலையில் உள்ள சிலாப் 20 அடி நீளம், 2 அடி உயரம் கொண்டது. இந்த சிலாப் மற்றும் சிலாப்பின் மேலே இருந்த சாமி சுதைகள் சேதமடைந்திருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஏற்கனவே சேதமடைந் சிலாப் மொத்தமாக இடிந்து கீழே விழுந்தது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் வந்து பாதிப்படைந்த கோபுரத்தை பார்வையிட்டார். தொடர்ந்து பாதிப்படைந்த கிழக்கு 2வது கோபுரத்தில் புனரமைப்பு பணிகளுக்காக சாரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சாரம் அமைக்கப்பட்டவுடன், புனரமைப்பு பணிகள் நாளை துவங்கும் என ரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் கூறினார். இந்நிலையில் சேதமடைந்த கிழக்கு 2வது தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தை நேற்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

அப்போது, சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என்ஐடி கல்லூரி தொழில்நுட்ப பிரிவு மாணவர்களை கொண்டு கிழக்கு கோபுரம் உள்பட ரங்கம் கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டர் மற்றும் கோயில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது கலெக்டர் பிரதீப்குமார், கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், மேயர் அன்பழகன், எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post சிலாப் இடிந்து விழுந்த ரங்கம் கோயில் கோபுரத்தை அமைச்சர் நேரு பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: