உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய தங்கத்தேரோட்ட திருவிழா கோலாகலம்!

தூத்துக்குடி: உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441வது திருவிழா கொடியேற்றத்துடன், கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி இன்று நடைபெற்றது. தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது பனிமய மாதா பேராலயம். உலகப் பிரசித்திபெற்ற இப்பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டுத் திருவிழா ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்தத் திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான 10ம் நாள் நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர்ப்பவனி நடைபெறும். இந்தாண்டு தேர்பவனி இன்று நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்தாண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது. இந்த பேராலயத்தின் 441ம் ஆண்டு திருவிழா மற்றும் 16வது தங்கத் தேர் பவனி திருவிழாவாகும்.

கொடியேற்றத்தையொட்டி, காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2ம் திருப்பலியும் நடந்தது. தொடர்ந்து 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி 8.30 மணியளவில் பேராலயம் முன் உள்ள கொடி மரத்தில் அன்னையின் திருக்கொடியேற்றப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி இன்று நடைபெற்றது. தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நிகழ்வும் உள்ளது.
இந்த தங்கத் தேர் சுமார் 216 ஆண்டுகள் பழமையானதாகும். 53 அடி உயரம் கொண்ட இந்த தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. பழமையான தேர் என்பதால் 80 சதவீதம் வரை புதிதாக தேக்குமரக்கட்டைகள் கொண்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தேருக்கு, ஜப்பான் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட தங்க தாள்கள், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட 9,000 வைர கற்கள் ஆகியவை கொண்டு அலங்கரிக்கும் பணிகளும் முன்னதாக நடைபெற்றன.

இவ்விழாவை முன்னிட்டு 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 23 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 57 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

The post உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய தங்கத்தேரோட்ட திருவிழா கோலாகலம்! appeared first on Dinakaran.

Related Stories: