உண்மை தோற்காது, நீதி அழியாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது: காங். எம்.பி. ஜோதிமணி வரவேற்பு

டெல்லி: உண்மை தோற்காது, நீதி அழியாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்தி நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளிலும் இனி பங்கேற்க முடியும். உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததால் ராகுல் காந்தி எம்.பி. பதவியை தொடர்வார். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் இன்று நீதி வழங்கியுள்ளது. ஒரு போதும் உண்மை தோற்காது; நீதி அழியாது என்பது இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தலைவர் ராகுல்காந்தி, மக்கள் விரோத நரேந்திர மோடி அரசுக்கு எதிராக, அதானி நரேந்திர மோடி ஊழலை அம்பலப்படுத்தும் விதமாக நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் அச்சமற்ற, சமரசமற்ற அரசியலை முன்னெடுத்தார்கள். இதனை கண்டு நரேந்திர மோடி அரசு பயந்துவிட்டது.

தலைவர் ராகுல்காந்தி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடாது, ராகுல் காந்தி பிரதமராக வரக்கூடாது என சதி செய்து பிரதமர் மோடியும், பாஜகவும் அநீதியை இழைத்தார்கள். இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 2 ஆண்டுகாலம் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். இதேபோல், ராகுல் காந்தி வழக்கின் மூலம் ஜனநாயகம் பாதிப்புக்கு உள்ளாக இருந்ததை உச்சநீதிமன்ற உத்தரவு தடுத்து நிறுத்தியுள்ளது என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

The post உண்மை தோற்காது, நீதி அழியாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது: காங். எம்.பி. ஜோதிமணி வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: