தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடி பெள்ளிக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு நேற்று பணி நியமன ஆணையினை வழங்கினார். முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்ட வருகையின்போது தெப்பக்காடு யானைகள் முகாம் மேம்படுத்தப்படும் என்றார்.

தற்போது, தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் பெள்ளி, அனாதையான யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பெள்ளிக்கு வழங்கினார். இந்த நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, பெள்ளியின் கணவர் பொம்மன் மற்றும் உயர் அலுவலர்கள் இருந்தனர்.

The post தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடி பெள்ளிக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: