அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம்

 

கோவை, ஆக. 2: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஏராளமான தாய்மார்கள் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மருத்துவமனையின் டீன் நிர்மலா பங்கேற்று தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
தாய்ப்பால் அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு என்பது 1992ல் இருந்துதான் வந்தது. அதற்கு பிறகுதான் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு குடும்பத்தில் இருவரும் சம்பாதிக்க வேண்டிய சூழல் வந்த பிறகு தான் தாய்ப்பால் அளிப்பது குறைந்ததாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். தாய்ப்பாலுக்கு உள்ள சக்திக்கு இணையாக செயற்கையாக இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, 6 மாதம் வரை குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் அளிக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடத்திற்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். 2 வயது வரை கூட குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கலாம். இதனால், அடுத்த 20 வருடத்திற்கு பிறகு வரும் தலைமுறை மற்றும் சமுதாயம் நன்றாக இருக்கும்.

தாய்ப்பால் அளிக்க வீட்டில் உள்ளவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும், தாய்ப்பால் அளிப்பதால் பெண்கள் மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்க முடியும். மேலும், தாய்ப்பால் தானம் அளிக்கவும் தாய்மார்கள் முன்வர வேண்டும். கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கியின் மூலம் கடந்த 5 வருடங்களில் 1 கிலோ முதல் 1.5 கிலோ எடைக்கு குறைவாக பிறந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசின் முதல் பரிசை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பெற்று வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் appeared first on Dinakaran.

Related Stories: