ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய சகஸ்ரபத்மாபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தற்போது வரை கல்யாணபுரம் கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த கடைக்கு, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், வயதானவர்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த நிலை சுமார் 50 ஆண்டு காலமாகவே நீடித்து வருகிறது. எனவே தங்கள் கிராமத்தில் ஒரு பகுதிநேர ரேஷன்கடை அமைக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பகுதி நேர ரேஷன் கடை திறக்ககோரி சித்தூர், திருத்தணி நெடுஞ்சாலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கல்யாணபுரம் கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமத்திற்கு புதியதாக ஒரு பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என அனைவரும் கோஷங்களை எழுப்பி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: