இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ஆசிய ஆடவர் ஆக்கி போட்டிக்கான வெற்றிக் கோப்பை அறிமுக விழா: அமைச்சர் காந்தி பங்கேற்பு

திருவள்ளூர்: 7வது ஹீரோ ஆசிய ஆடவர் ஆக்கி விளையாட்டுப் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் ஆக்கி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 7வது ஹீரோ ஆசிய ஆடவர் ஆக்கி விளையாட்டுப் போட்டியின் வெற்றிக் கோப்பை அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாண், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான உமாமகேஸ்வரி, நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தி பேசினார். தென்னிந்தியாவின் ஆக்கியின் தலைநகராக விளங்கிய சென்னையில் ஹீரோ ஆசிய சாம்பியன்ஷிப் 2023 டிராபி நடத்துவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் 2023 சென்னையில் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஆசியாவிலிருந்து ஆறு அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இந்தியா, ஜப்பான், கொரியா பாகிஸ்தான், சீனா மற்றும் மலேசியா ஆகிய ஆறு அணிகள் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக போட்டியிடவுள்ளன.

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் நடத்தப்படுகிறது. 16 வருடங்கள் கழித்து நம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன் டிராபி நடைபெறவுள்ளது. கடைசியாக 2007ல் இப்போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த 7 வது ஹீரோ ஆசிய ஆடவர் ஹாக்கி விளையாட்டு போட்டிகளுக்கான பாஸ் தி பால் கோப்பையானது டெல்லி, சண்டிகர், கௌகாத்தி, பாட்னா, புவனேஸ்வர், ராஞ்சி, பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் சென்னை உட்பட பல நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இன்றைய தினம் நம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது.

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் பாஸ் தி பால் டிராபி சுற்றுலா ஆக்கி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாக்குவதற்கும் இந்திய ஹாக்கி அணிக்கு ஆதரவை பெறுவதற்கும் மற்றும் முன்னேற்ற சூழலை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு நமது திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளது. இந்த கோப்பையை அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் கீழ் நடைபெறும் போட்டியில் இந்தியா 2011, 2016 மற்றும் 2018 என மூன்று முறை கோப்பைகளை வென்றுள்ளது. கடந்த முறை 2021ல் தென் கொரியா இப்பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சாம்பியன் கோப்பையை 4வது முறையாக இந்தியா வென்று வரலாறு படைக்கும். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்பதை கூறி இந்தியா வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவிதார். இதனை தொடர்ந்து வெற்றி கோப்பையை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் 7வது ஹீரோ ஆசிய ஆடவர் ஆக்கி விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ஆர்.காந்தி ஆக்கி விளையாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில், திமுக மாவட்ட அமைத்தலைவர் திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், மகாலிங்கம், ரமேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிரேம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட ஆக்கி சங்கம் செயலாளர் செல்வமணி, மாவட்ட கவுன்சிலர்கள் சரஸ்வதி சந்திரசேகர், சிவசங்கரி உதயகுமார், விஜயகுமாரி சரவணன் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ஆசிய ஆடவர் ஆக்கி போட்டிக்கான வெற்றிக் கோப்பை அறிமுக விழா: அமைச்சர் காந்தி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: