குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் தங்க சேவல் கொடி: காணிக்கையாக வழங்கிய பக்தர்

 

குன்றத்தூர், ஜூலை 31: குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு, ரூ.64 லட்சம் மதிப்பிலான தங்க சேவல் கொடியை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தினமும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இந்நிலையில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் ரூ.64 லட்சம் மதிப்பில் ஒரு கிலோ 45 கிராம் எடை கொண்ட தங்கத்தினாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

இதனை, அக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியின்போது, கோயில் அறங்காவலர்கள் குணசேகரன், சரவணன், ஜெயக்குமார், சங்கீதா, கோயில் செயல் அலுவலர் கன்னியா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தற்போது காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த தங்க சேவல் கொடி தினமும் முருகன் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்படும் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் தங்க சேவல் கொடி: காணிக்கையாக வழங்கிய பக்தர் appeared first on Dinakaran.

Related Stories: