திருவண்ணாமலையில் ஆடி வெள்ளி திருவிழாவில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

*யானை வாகனத்தில் பச்சையம்மன் பவனி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை பச்சையம்மன் கோயிலில் ஆடி 2ம் வெள்ளியை முன்னிட்டு, நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பச்சையம்மன் மன்னார்சுவாமி கோயிலில் நடைபெறும் ஆடி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, பச்சையம்மன் பவனி வருகிறார்.

அதன்படி, ஆடி 2ம் வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு யானை வாகனத்தில் பச்சையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், வரும் 4ம் தேதி மூன்றாம் வெள்ளியன்று சிம்ம வாகனத்தில் பச்சையம்மன் வீதியுலா நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில், செங்கம் புதூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் ஆடி 2ம் வெள்ளி விழா விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி, படவேடு மற்றும் பதூர் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

The post திருவண்ணாமலையில் ஆடி வெள்ளி திருவிழாவில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: