நிலைமையை ஆராய்வதற்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் 20 எம்பிக்கள் இன்று மணிப்பூர் பயணம்

புதுடெல்லி: நிலைமையை நேரில் ஆராய்வதற்கு காங்கிரஸ், திமுக கட்சிகளை சேர்ந்த இந்தியா கூட்டணியின் 20 எம்பிக்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். அங்கு 2 நாள் பயணம் செய்கின்றனர். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரத்தில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஒன்றிய பாஜ அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய இன்று மணிப்பூர் செல்கின்றனர். இதில், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகய்(காங்.), கனிமொழி(திமுக), சுஷ்மிதா தேவ்(திரிணாமுல்), மகுவா மஜி(ஜேஎம்எம்), முகமது பைசல்( என்சிபி) ஜெயந்த் சவுத்ரி( ராஷ்டிரிய லோக்தளம்), மனோஜ் ஜா(ஆர்ஜேடி), பிரேமச்சந்திரன்(ஆர்எஸ்பி), தொல்.திருமாவளவன்(விசிக),  ராஜிவ் ரஞ்சன், அனில் பிரசாத் ஹெக்டே(ஐக்கிய ஜனதா தளம்), சந்தோஷ் குமார் (இந்திய கம்யூ.), ஏ.ஏ.ரஹிம்(மார்க்சிஸ்ட்), ஜாவேத் அலிகான்(சமாஜ்வாடி) முகமது பஷீர்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), சுஷில் குப்தா(ஆம் ஆத்மி), அரவிந்த் சாவந்த்(சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு),டி.ரவிக்குமார்(திமுக), புலோ தேவி நேதம்(காங்.) ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

கவுரவ் கோகய் கூறுகையில்,‘‘ கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பிரேன் சிங் கூறுகிறார். அப்படியானால், இரண்டு மாதங்களாக நிர்வாகம் தூங்கி கொண்டிருந்ததா? . இது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றார். திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறுகையில்,‘‘ இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று காலை மணிப்பூர் செல்கின்றனர். அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை, உயிர் சேதம் மற்றும் சொத்துகள் சேதம் குறித்து ஆய்வு செய்வார்கள்’’ என்றார்.

* பாஜ கிண்டல்

இதுபற்றி முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘இந்தியா கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் செல்வதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் பிரச்னையை பெரிதாக்கி விடக்கூடாது’’ என்றார். பாஜவை சேர்ந்த எம்பி ரவி கிஷன் கிண்டலாக தெரிவிக்கையில், ‘‘எதிர்க்கட்சி எம்பிக்கள் பாகிஸ்தான், சீனாவுக்கு செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது’’ என்றார்.

* ஐக்கிய ஜனதா தளம் உத்தரவு

வரும் ஆகஸ்ட் 11ம் தேதி டெல்லி தேசிய தலைநகர் பகுதி திருத்த மசோதா 2023ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அன்றைய தினம் கட்சி எம்பிக்கள் அனைவரும் சபையில் ஆஜராக வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் தனது எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பது என ஐக்கிய ஜனதா தளம் முடிவெடுத்துள்ளது. ஆனால், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவரும் மாநிலங்களவை துணை தலைவருமான ஹரிவன்ஷ்ராய் என்ன நிலை எடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தால் அவரது பதவி பறிக்கப்படும் ஆபத்து உள்ளது. பாஜவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்த போதிலும் ஹரிவன்ஷ் தொடர்ந்து அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

The post நிலைமையை ஆராய்வதற்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் 20 எம்பிக்கள் இன்று மணிப்பூர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: