அயப்பாக்கம் ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ தேவி செல்லியம்மன் கோயில் ஆடித்திருவிழா

ஆவடி: அயப்பாக்கம் எல்லை பிடாரி ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ தேவி செல்லியம்மன் திருக்கோயிலில் 15ம் ஆண்டு ஆடி திருவிழா நடைபெற்றது. ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி தலைவர் துரை வீரமணி ஏற்பாட்டில் ஸ்ரீ தேவி செல்லியம்மன் திருக்கோயில் 15ம் ஆண்டு 5 நாள் ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 28 ஆடுகள் பலி கொடுத்து, அமிர்த கூழ் வார்க்கப்பட்டு, இரவு கும்பம் படையலிட்டு 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கி அம்மனுக்கு ராஜ அலங்காரத்தில் பூ பல்லக்கில் பச்சை ரோஸ் வண்ண பட்டுடுத்தி வான வெடி முழங்க திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலை சக்தி கரகம் புறப்பட்டு திருவீதி உலா நடைபெற்ற பூஜையில் செல்லியம்மனுக்கு 500 கிலோ கேழ்வரகு மூலம் பிரம்மாண்ட அண்டாக்களில் அமிர்த கூழ் தயார் செய்து அம்மனுக்கு படையல் வைத்து, கருவாட்டுக் குழம்பு முருங்கைக்கீரை உள்ளிட்டவைகளும் படையலாக வைக்கப்பட்டது. பம்பை உடுக்கை முழங்க பூஜைகள் செய்யப்பட்டு. பக்தர்கள் ஆவேசத்துடன் அருள் வந்து நடனமாட 28 கிடா ஆடுகள் அம்மனுக்கு வெட்டி பலியிட்டு படையல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் செல்லியம்மனுக்கு. ஆடு, கோழி, மீன், முட்டை, கருவாடு உள்ளிட்டவை படையலாக வைக்கப்பட்டு பம்பை உடுக்கை முழங்க பூஜைகள் நடைபெற்றது.

அதில் கோழி ஆட்டுக்கறி, மீன்குழம்பு என ஏழை எளிய மக்கள் சுமார் 6,000 பேருக்கு அசைவ சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. பின்னர் செல்லியம்மன் அலங்காரத்தில் பச்சை ரோஸ் வண்ண பட்டு உடுத்தி வைர நகைகள் சாத்தப்பட்டு அம்மன் பிரம்மாண்ட பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் சிறுவர் சிறுமியரின் பரதநாட்டியம், பக்தி பாடல்களுக்கு ஆடல் நிகழ்ச்சி என இரவு 10 மணி வரை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் துரைவீரமணி ரதத்தை இழுத்து தொடங்கி வைக்க, தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கையுடன் செல்லியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post அயப்பாக்கம் ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ தேவி செல்லியம்மன் கோயில் ஆடித்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: