கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 6 அடி குழி தோண்டினால் தண்ணீர்

*நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் பேராபத்து

*வீடுகளை காக்க அரசு நடவடிக்கை அவசியம்

கம்பம் : கம்பத்தில் 33 வார்டுகள் உள்ளன. முதல்நிலை நகராட்சியான இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். தற்ேபாது கம்பம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல இடங்களில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினால் தண்ணீர் வருகிறது. மேலும் இறந்தவர்களை புதைக்க குழி தோண்டினாலும் தண்ணீர் வருகிறது. இந்த நிலத்தடி நீர்மட்ட உயர்வால், வரும் காலங்களில் கம்பம் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கான பேராபத்து உள்ளது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து முன்னாள் 5 மாவட்ட விவசாய சங்கத்தலைவர் அம்பாஸ் கூறுகையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து லோயர் கேம்பில் உள்ள நீர்மின் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் தண்ணீர் மின்சார உற்பத்திக்குப்பின் வண்ணான்துறையில் தேங்குகிறது. இந்த ஜீரோ பாயிண்ட்டிலிருந்து 18ம் கால்வாய் தொடங்குகிறது. அங்கிருந்து ஊரின் மேற்குப்புறமாக கீழக்கூடலூர், மேலக்கூடலூர், கம்பம், உத்தமபுரம், ஊத்துக்காடு, அனுமந்தன்பட்டி, பாளையம், தேவாரம், போடி என 59 கி.மீ பயணித்து கொட்டக்குடி ஆற்றில் சேர்கிறது.இதில் ஜீரோ பாயிண்ட்டிலிருந்து தண்ணீர் எல்லையை சென்றடைய 62 மணி நேரம் ஆகிறது.

கால்வாயில் இவ்வளவு தாமதமாக தண்ணீர் செல்வதால், நிலத்தடி நீர் இங்கு அதிகளவில் பெருகுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் 4 முதல் 6 அடி வரை தோண்டினால் தண்ணீர் வருகிறது.எனவே, பள்ளம் சார்ந்த கம்பம், கூடலூர், புதுப்பட்டி பகுதிகளில் 18ம் கால்வாயின் இரு கரைகளிலும், தரைப்பகுதியிலும் கான்கிரீட் லைனிங் செய்ய வேண்டும். அவ்வாறு லைனிங் செய்தால் மட்டுமே கால்வாயில் தண்ணீர் தடையின்றி இலக்கு நோக்கி வேகமாக செல்லும். எனவே 18ம் கால்வாய் தண்ணீர் இப்பகுதிகளில் நிலத்தடியில் அதிகளவில் தேங்குவைத்த தடுக்கவும், கம்பத்தில் உள்ள மக்களையும், நூற்றுக்கணக்கான வீடுகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 6 அடி குழி தோண்டினால் தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: