திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள்; டிராக்டர் கொண்டு உழுது அழித்த விவசாயி..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இன்றி கருகி வரும் குறுவை நெற்பயிர்களை கண்டு விரக்தி அடைந்த விவசாயி, அவற்றை டிராக்டர் கொண்டு அழித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி மணலி, பரப்பாகரம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைத்தெளிப்பு மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் கிராமத்தில் உள்ள குளம், குட்டைகளில் இதுவரை தண்ணீர் நிரம்பவில்லை. அண்மையில் பெய்த லேசான மழையின் காரணமாக பயிர்கள் முளைக்க தொடங்கின.

ஆனாலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நேரத்தில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருக தொடங்கின. இதனால் மனவேதனை அடைந்த விவசாயிகள், குறுவை சாகுபடி பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அழித்தனர். ஏக்கர் ஒன்றுக்கு 18 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள்; டிராக்டர் கொண்டு உழுது அழித்த விவசாயி..!! appeared first on Dinakaran.

Related Stories: