உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரம்: கலெக்டர் நேரடி ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டார். உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோயில் தேரோடும் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி, சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. அதையொட்டி, மாட வீதியின் இருபுறமும் நிரந்தர வடிகால் வசதிகள் அமைத்தல், மின் கம்பங்களை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், மாட வீதியில் உள்ள மின் கம்பிகளை எல்லாம் புதைவட மின்வழித்தடமாக மாற்ற ரூ.5 கோடி நிதியும், நகராட்சி குடிநீர் இணைப்புகளை எல்லாம் மாற்றி அமைக்க ரூ.3.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக, அதி நவீன தரத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி முதற்கட்டமாக பே கோபுர சாலையில் திரவுபதி அம்மன் கோயில் தொடங்கி, சங்கு மேடு பகுதி வரை முழு வீச்சில் நடந்து வருகிறது. அதையொட்டி, ஏற்கனவே இருந்த தார் சாலையை முற்றிலும் அகற்றிவிட்டு, சுமார் 3 அடி ஆழம் வரை பள்ளம் எடுத்து கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது.

அதையொட்டி, பே கோபுர சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், பே கோபுர வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை, கலெக்டர் முருகேஷ் நேற்று நேரடி ஆய்்வு செய்தார். அப்போது, சாலை அமைக்கும் பணியை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இப்பணிகளை மேற்கொள்ளும்போது, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தீபத்திருவிழாவுக்குள் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாாளர் ராஜ்குமார், உதவி ேகாட்ட பொறியாளர் ரகுராமன், ஆர்டிஓ மந்தாகினி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேசன், நகராட்சி பொறியாளர் ஆணையாளர் தட்சணாமூர்த்தி, நீலேஸ்வர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரம்: கலெக்டர் நேரடி ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: