எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தைப் புனரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தைப் புனரமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாநிலத்தில் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.

மேலும், நமது மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர விளையாட்டுப் பயற்சி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தகுதிவாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல், போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் பொருட்டு மாநிலத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகிய சீர்மிகு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இது தவிர மாநிலத்தில் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதையும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது.

மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியம் சென்னையில் வருகிற ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 12 வரை ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை -2023 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் புரனமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தைப் புனரமைக்கும் பணிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை நடைபெறவுள்ளன. இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தைப் புனரமைக்கும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால், ஹாக்கி மைதானம் மற்றும் பிற வசதிகளுக்காக நடைபெற்று வரும் கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் – அலுவலர்களை வலியுறுத்தினோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தைப் புனரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: