அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் சிவகிரி சின்ன ஆவுடையப்பேரி குளத்தில் மண் கொள்ளை

*விவசாயிகள் போராட முடிவு

சிவகிரி : அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் சிவகிரி சின்ன ஆவுடையப்பேரி குளத்தில் பல அடி ஆழம் வரை மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா விவசாயத்தையும், அதனைச் சார்ந்த கூலி தொழிலையும் நம்பி உள்ள பகுதி ஆகும்.

இப்பகுதியில் கிணறு மற்றும் ஏரி, குளம் பாசனத்தின் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாய பணிகள் நடைபெறும் இந்த சூழலில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள சின்ன ஆவுடையப்பேரி குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பொக்லைன் இயந்திரம், டிராக்டர்கள் மூலமாக செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்படுகிறது. இதற்காக கனிமங்கள் எடுத்துக் கொள்வதற்கான தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இக்குளத்தில் 70.12 ஹெக்டர் நிலப்பரப்பில் மூன்று கன மீட்டர் உயரத்தில் மண் அள்ளுவதற்கு ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரைக்கும் மண் அள்ளுவதற்கு தென்காசி மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்க துறை மூலமாக துணை இயக்குனர் அனுமதி வழங்கி உள்ளார்.

ஆனால் இந்த இடத்தில் மட்டும் மண் அள்ளாமல் குளத்தின் பல்வேறு இடத்தில் ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலமாக விதிகளை மீறி 15 அடி உயரத்திற்கு மண் அள்ளிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு குளத்தில் அள்ளப்படும் மண்ணை செங்கல் சூளை வியாபாரிகளுக்கு டிராக்டர் ஒன்றுக்கு ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. அரசின் விதிகளை கடைபிடிக்காமல் ஒரே ஒப்புகை சீட்டை (பாஸை) கொண்டு ஒரு நாள் முழுவதும் மண் எடுத்து கொண்டிருக்கின்றனர்.

மண் பாஸ் எடுத்த நாட்கள், விவசாய பயனாளிகள், எத்தனை லோடு கொண்டு செல்லப்படும் வாகனத்தின் எண் இவைகளை கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறையில் இருந்து அலுவலர்கள் முறைப்படி நியமிப்பதில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு பல அடி ஆழம் வரை மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சின்ன ஆவுடைய பேரி குளம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மணல் கொள்ளையை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பயன்பாட்டிற்கு மண் தருவதில்லை. மாறாக, சட்ட விரோத செங்கல் சூளைகளுக்கு இங்கிருந்து மண் எடுத்து செல்லப்படுகிறது. பல அடி ஆழத்தில் தோண்டி மண் கடத்துவது தொடர்வதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் விதியை கடைப்பிடிக்காமல் ராட்சத வாகனங்களை பயன்படுத்தி ஒரே பாஸை கொண்டு விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் செங்கல்சூளை வியாபாரிகளுக்கு மண் விற்கப்படுவதை விவசாயிகள் பெரிதும் எதிர்த்து வருகிறோம்.

இந்த மணல் கொள்ளையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாஜ உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினர்களும் கண்டன போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர். இந்த மணல் கொள்ளையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பதாகை வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும் அரசின் விதி முறையின்படி மண் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் சிவகிரி சின்ன ஆவுடையப்பேரி குளத்தில் மண் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: