தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!!

பெங்களூரு: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தற்போது துணை முதல்வராக இருக்கும் சிவகுமார், 2013 – 18 காங்கிரஸ் ஆட்சியில், நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில் பாய்ந்தோடும் காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில், 9,000 கோடி ரூபாயில் அணை கட்டுவதாக 2017ல் அறிவித்தார். இங்கு, 4.75 டி.எம்.டி., தண்ணீர் தேக்கி வைத்து, பெங்களூரு சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், அணை கட்ட இருப்பதாகவும், காங்கிரஸ் அரசு அறிவித்தது.

அதன்பின், 2018ல் காங்கிரஸ் கூட்டணி சார்பில், முதல்வரான ம.ஜ.த.,வின் குமாரசாமி ஆட்சியில், முழு திட்ட அறிக்கை தயாரித்து, ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில், அப்பகுதியில் சர்வே பணிகள் மேற்கொள்ள கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. மேகதாதுவில் அணை கட்டும் பட்சத்தில், தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வரத்து குறைந்து, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், தமிழகம் சார்பில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. அணை கட்ட தேவையான வனப்பகுதியை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த 29 வனத்துறை அதிகாரிகள் நியமனம் செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட சுமார் 13,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கான நிலம் வனப்பகுதிக்குள் வருவதால் தற்போது வரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை. மரங்கள், வன விலங்குகளுக்கு பாதிப்பின்றி திட்டத்தை செயல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

The post தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: