கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை: ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உட்பட மூவர் விடுதலை

வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தின் போது மீனவரை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப. உதயகுமார், மைபா ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியுடன் நிறுவும் பணிகள் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கியது. 2010ம் ஆண்டு கூடங்குளம் முதல் அணு உலையில் மாதிரி எரிபொருள் நிரப்பும் பணிகள் தொடங்கின. 2011ம் ஆண்டு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில் இடிந்தகரை லூர்துமாதா ஆலயம் முன்பு போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தின்போது அணுஉலை ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அபோது இரண்டு மீனவர்களை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக இடிந்தகரையைச் சேர்ந்த சாந்தகுரூஸ் மகன் இளங்கோ, ரோசாரி மகன் பிரைட்டன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப உதயகுமார், மைபா.ஜேசுராஜ், புஷ்பராயன் உள்பட 22 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ராணி என்பவர் இறந்து விட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் சார்பு நீதிபதி பர்சத் பேகம் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப.உதயகுமார், மைபா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 18 பேருக்கு கொலை முயற்சி வழக்கிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், சட்ட விரோதமாக கூடி திட்டம் தீட்டியதற்காக 2 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. 2 ஆண்டு தண்டனை ஏக காலம் அனுபவித்துக் கொள்ளலாம் எனவும், வழக்கிற்கான அபராத தொகை 18 பேருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

The post கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை: ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உட்பட மூவர் விடுதலை appeared first on Dinakaran.

Related Stories: