திண்டுக்கல் – கரூர் சாலையில் தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: திண்டுக்கல் – கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திண்டுக்கல் மாநகரிலிருந்து கரூர், திருச்சி செல்லுகிற இணைப்புச் சாலைகள் அருகருகே உள்ளன. இந்த இரு சாலைகளின் குறுக்கேயும் திண்டுக்கல் – பாலக்காடு செல்லும் இருப்புப்பாதை அமைந்துள்ளது. தொடர் வண்டி வரும் நேரங்களில், இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவ-மாணவிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதனை சரி செய்ய சுரங்கப்பாதை அமைத்துத் தரவேண்டி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் போராடி வந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திண்டுக்கல் -, திருச்சி சாலையின் குறுக்கே மேம்பாலமும், அதனருகே செல்லும் திண்டுக்கல் – கரூர் சாலையில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டது. ஆனால் ரூ.17கோடி மதிப்பில், 20 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை பல்வேறு குறைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத அவலமானச் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்திலும் சுரங்கத்திற்குள் தண்ணீர் தேங்கி, கழிவு நீர் ஓடை போலக் காட்சியளிப்பதால் நோய்த்தொற்றும் பரவி வருகிறது.

இதனை சீர்செய்து தரக்கோரி திண்டுக்கல் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே, இனியும் அரசு காலம் தாழ்த்தாமல் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மாவட்ட நிர்வாகம் மூலம் தவறான முறையில் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் – கரூர் சுரங்கப்பாதையைச் சீரமைத்து துரிதமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

The post திண்டுக்கல் – கரூர் சாலையில் தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்: சீமான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: