முதல்வரின் குரலை பார்த்து பயந்துவிட்டனர்!: ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு பாஜக தொடர் நெருக்கடி..ஆர்.எஸ்.பாரதி சாடல்..!!

சென்னை: ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் பொன்முடி இல்ல வாயிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

அமலாக்கத்துறை சோதனை: ஒன்றிய அரசு நெருக்கடி

பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு பின் ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது. எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பதால் மத்திய அரசு பல்வேறு நெருக்கடி கொடுக்கிறது. பாஜகவிற்கு எதிரான முதல்வரின் குரலை பார்த்து பயந்துவிட்டனர். நான் செல்போனில் அழைத்தும் பொன்முடியை தொடர்புக் கொள்ள முடியாத நிலை உள்ளது. அமைச்சர் பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னை அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

அமலாக்கத்துறை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?:

அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார். 100 வழக்குகளில் 2இல் கூட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அமலாக்கத்துறை சோதனைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்; மிசாவையெல்லாம் பார்த்திருக்கிறோம். மோடி அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் கர்நாடகாவில் பா.ஜ.க.வுக்கு என்ன ஏற்பட்டதோ அதுவே காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள மாநிலங்களிலும் நடக்கும் என்று குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை சோதனை அகில இந்திய பிரச்சனையாகும்:

எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது. இன்று பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. பொன்முடி இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை அகில இந்திய பிரச்சனையாகும் என்றும் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்தார்.

The post முதல்வரின் குரலை பார்த்து பயந்துவிட்டனர்!: ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு பாஜக தொடர் நெருக்கடி..ஆர்.எஸ்.பாரதி சாடல்..!! appeared first on Dinakaran.

Related Stories: