உ.பி பாஜ. கூட்டணியில் புதிய கட்சி

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருந்த சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்பிஎஸ்பி) தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர், ஏற்கனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியுள்ளார். டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ராஜ்பர் அவரது மகன் அரவிந்த் ராஜ்பர் உடன் சந்தித்தார். அவரை வரவேற்ற அமித் ஷா, ராஜ்பரை சந்தித்த படத்தை ட்வீட் செய்து, “ என்டிஏ குடும்பத்திற்கு வரவேற்கிறேன். ராஜ்பரின் வருகை உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் என்று அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து ராஜ்பர் தனது டிவிட்டரில், ‘’பாஜ.வும் எஸ்பிஎஸ்பி.யும் ஒன்று சேர்ந்துள்ளன.

சமூக நீதி, தேசப் பாதுகாப்பு, நல்லாட்சி, தாழ்த்தப்பட்டோர், நலிவடைந்தோர், விவசாயிகள், ஏழைகள், தலித்துகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மற்றும் ஒவ்வொரு ஏழைப் பிரிவினருக்கும் அதிகாரம் அளிப்பதற்காக பாஜ.வும் எஸ்பிஎஸ்பி.யும் இணைந்து போராடும். மேலும், டெல்லியில் நாளை நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்போம்,’’ என்று கூறியுள்ளார். ராஜ்பார் 2022 உ.பி. சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இதனால் பூர்வாஞ்சல் பகுதியில் பாஜ.வின் வாக்குகள் குறைந்தது. இந்நிலையில் ராஜ்பர் மீண்டும் என்டிஏ. கூட்டணியில் இணைந்திருப்பது பாஜ.வுக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post உ.பி பாஜ. கூட்டணியில் புதிய கட்சி appeared first on Dinakaran.

Related Stories: