வடகிழக்கு மாநிலங்களின் காங். தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தல் குறித்து வடகிழக்கு மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மேகாலயா, அருணாச்சலபிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், சிக்கிம், திரிபுரா, நாகலாந்து மாநிலங்களின் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அஜோய்குமார், மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற தேவையான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; இந்தியா, இன்று பா.ஜவின் பிளவு மற்றும் முரண்பாடான தீய அரசியலின் தாக்குதலைக் காண்கிறது. சமூகங்கள் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கின்றன. பேச்சு சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அடிப்படை உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. வடகிழக்கில் காங்கிரஸ் கட்சியால் செயல்படுத்தப்பட்ட வாழ்க்கையை மாற்றும் முக்கியமான திட்டங்கள் பா.ஜவால் மாற்றப்படுகின்றன. காங்கிரஸின் ஒவ்வொரு தலைவரும், தொண்டர்களும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய நேரம் இது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தனிச்சிறப்பு மட்டுமல்ல, நமது இருப்புக்கான அடிப்படையும். பூத் மட்டத்திலிருந்து தொடங்க வேண்டிய நேரம் இது. மக்களைச் சென்றடையவும், வடகிழக்கில் உள்ள சக குடிமக்களின் குரலை வலுவாக உயர்த்தவும். சமூக நீதி, அமைதி, முன்னேற்றம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்காக நமது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்காகப் போராட காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

The post வடகிழக்கு மாநிலங்களின் காங். தலைவர்களுடன் கார்கே ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: