பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீஞ்சூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் 28 கவுன்சிலர்கள் தனித்தனி மனு

பொன்னேரி: மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி பூமிநாதன், மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், குமார் முன்னிலையில் வகித்தனர்.

கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 55 ஊராட்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிப்படை தேவைகள், என்னென்ன செய்ய வேண்டும் என, 28 கவுன்சிலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கோரிக்கை மனுவாக கொடுக்க வேண்டும் என தலைவர் ரவி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாலைகள், அரசு கட்டிடங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

மீஞ்சூர் ஒன்றியம், மேட்டுப்பாளையம் பகுதியில் வன்னிப்பாக்கம் ஊராட்சியில், புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் திறக்கப்பட்டது. திறந்து, ஒரு வார காலத்திற்குள் மருத்துவர்கள் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடியே கிடக்கிறது. இதனால், கிராம மக்கள் மற்றும் அனுப்பம்பட்டு, இலவம்பேடு, நாலூர், சிறுவாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் சிகிச்சை பெற செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என ஒன்றிய உறுப்பினர் பானு பிரசாத் கோரிக்கை வைத்தார்.

ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி பேசும்போது, பொதுமக்களுக்கு சுகாதாரம் முக்கியம் என்ற அடிப்படையில் உடனடியாக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினர்கள் அன்பு, சகாதேவன், தமிழன்ஷா, கதிரவன், ராஜா,வெற்றி, ரமேஷ், பானு பிரசாத், சுமித்ரா குமார், ஜமுனா, கிருஷ்ண பிரியா, செல்வழகு, மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை குறித்து தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர்.

The post பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீஞ்சூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் 28 கவுன்சிலர்கள் தனித்தனி மனு appeared first on Dinakaran.

Related Stories: