பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இன்று ஆனிப் பெருந்திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்

ஏரல்: குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா இன்று நடைபெற்று வருவதையொட்டி கோயிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழாவில் தமிழகமெங்கும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா கடந்த 27ம்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய ஆனிப் பெருந்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு மங்கள இசை, 8 மணிக்கு கிளாரினெட் இன்னிசை, 9 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, பகல் 11.30 மணிக்கு நாதஸ்ர நிகழ்ச்சி, 12 மணிக்கு அன்னதானம், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, 2 மணிக்கு பக்தி இசை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையில் கோயிலில் மாவிளக்கு எடுத்து, கொளுக்கட்டை அவியல் செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 4 மணிக்கு பட்டிமன்றம், இரவு 6.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி, 10 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல், நள்ளிரவு 1 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு பூஜை, இரவு 2 மணிக்கு நாராயணசுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட முக்கிய ஊர்களில் இருந்து குரங்கணிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழாவில் கார், வேன் உட்பட வாகனங்களில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள பக்தர்கள் தாமிரபரணி ஆற்று கரையோரப் பகுதி மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக குடிசை அமைத்து தங்கியுள்ளனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

The post பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இன்று ஆனிப் பெருந்திருவிழா: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: