டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு அல்ல: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: சென்னை, தலைமைச்செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மாவட்ட நிலை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: மதுவிலக்கு துறை சம்பந்தமாக மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தோம். அந்தவகையில், 18 தொழிற்சங்கங்களுடன் பேசி அவர்களின் கோரிக்கை தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கான முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, டாஸ்மாக் ஊழியர்கள் வங்கிகளில் பணம் செலுத்த செல்லும்போது பாதுகாப்பு, வங்கி ஊழியர்களே நேரடியாக பணத்தை வாங்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் மூலமாக டாஸ்மாக் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். சில கடைகளில் புகார்கள் வந்துள்ளநிலையில் அதை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். பார்கள் உரிமம் வைத்துள்ளவர்கள் விதிமுறைகளை கடைபிடித்து நடத்த வேண்டும். அதனை அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவும் போடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் அறிவித்தபடி, தற்போது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் குடிப்பதை நிறுத்தி இருந்தால் உள்ளபடியே மகிழ்ச்சி.

அதனால் வருமானம் குறைந்தால் பிரச்னை இல்லை. டாஸ்மாக் மூலமாக வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை. ஆனால், தவறான பாதைக்கு செல்வதை தடுப்பதுதான் எங்களின் நோக்கமாக உள்ளது. மதுபாட்டில்கள் இல்லாமல் டெட்ரா பாக்கெட் வரவேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 180 எம்.எல். வரக்கூடிய மதுபாட்டில்கள் 90 எம்.எல் ஆக குறைத்து டெட்ரா பாக்கெட்டில் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம். 180 எம்.எல் பாட்டில்களை வாங்க 40 சதவீதம் பேர் மற்றவர்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்காக தான் மற்ற மாநிலங்களை போல 90 எம்.எல் டெட்ரா பாக்கெட்டுகளை கொண்டு வர ஆய்வுகளை நடத்தி வருகிறோம். மதுபான கடைகள் தற்போது 12 மதியம் முதல் 10 இரவு வரை திறக்கப்பட்டு வருகிறது. ஆனால், காலையில் 7 மணி முதல் 9 மணி வரை திறக்க மது பிரியர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். தற்போதுவரை கடைகளின் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அதற்காக எந்த ஒரு முடிவும் செய்யப்படவில்லை. மது பானம் வாங்கும் பொழுது கடைகளில் பில் தருவதற்காக அதிகாரிகளிடையே ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளை துரிதமாக செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு அல்ல: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: