கலெக்டரின் நிராகரிப்பு ரத்து 13 வயது வீரருக்கு துப்பாக்கி உரிமம் வழங்க உத்தரவு

மதுரை: நாகர்கோவிலைச் சேர்ந்த வாட்சன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் ஆன்டிரிக் டெலினோ. மதுரை மற்றும்குமரி மாவட்ட ரைபிள் கிளப் உறுப்பினர். ஜூனியர் பிரிவில் பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளார். மாநில போட்டியில் பங்கேற்க துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக துப்பாக்கி உரிமம் கேட்டு கலெக்டரிடம் விண்ணப்பித்தார். ஆனால், 13 வயதே ஆவதால் கலெக்டர் நிராகரித்துள்ளார். அதை ரத்து செய்து, துப்பாக்கி உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மனுதாரர் வக்கீல் தீபக், ‘‘துப்பாக்கி சுடும் வீரராக அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் 12 வயதை கடந்தாலே துப்பாக்கி உரிமம் கேட்கலாம் என உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் கலெக்டர் நிராகரித்துள்ளார்’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், ‘‘பயிற்சி பெறும் நோக்கத்திற்காக 12 வயதிற்கு குறையாதவரால் துப்பாக்கி உரிமம் கேட்க முடியும் என்றாலும், அதற்குரிய நிபந்தனைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார். இதையடுத்து, மனுதாரர் மகனின் நோக்கத்தை நிறைவேற்றிடும் வகையில் இந்த மனு ஏற்கப்படுகிறது. நிராகரித்த கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த மனு கலெக்டருக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. அதை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து, சுற்றறிக்கையின்படியான நிபந்தனைகளை உறுதி செய்வது தொடர்பான பிரமாண பத்திரத்தை பெற்று துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post கலெக்டரின் நிராகரிப்பு ரத்து 13 வயது வீரருக்கு துப்பாக்கி உரிமம் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: