சிலிண்டர் விலையை குறைக்க சொல்லி பாஜ அமைச்சரை ஓடவிட்ட பெண்கள்: பதிலளிக்க முடியாமல் 10 நிமிடம் சமஸ்கிருதத்தில் மந்திரம்

பாகூர்: பிரதமர் மோடிக்காக கைத்தட்ட சொன்ன பாஜ அமைச்சரை, சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என கேட்டு பெண்கள் துளைத்தெடுத்ததால் அவர் ஓட்டம் பிடித்தார். புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்கு உட்பட்ட ஆராய்ச்சிக்குப்பத்தில் பல்வேறு பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. பாஜவை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செந்தில்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் சாய்.சரவணன்குமார் பேசுகையில், ‘ இந்த முறை ஆண்டுக்கு 100 நாள் வேலை நிச்சயமாக கொடுக்கப்படும். அதோடு கூடுதலாக 69 ரூபாய் ஊதியத்தை பிரதமர் மோடி உயர்த்தி இருக்கிறார்’ என்றார். பெண்களிடம் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கைதட்டுங்கள் எனக் கேட்டார். உடனே பெண்கள் அமைச்சரை பார்த்து, ‘சார்… ஒரு சிலிண்டர் விலை ரூ.1200 ஆக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள்’ என்று கேட்டனர். சில பெண்கள், ‘சார்… சிலிண்டர் விலையை முதலில் குறைங்க’ என்றனர்.

இதனை காதில் வாங்கிக்கொள்ளாத அமைச்சர், அங்கிருந்த பூஜை தட்டை எடுத்து வானத்தில் காட்டி, சமஸ்கிருதத்தில் மந்திரத்தை ஓத துவங்கினார். சிலிண்டர் விலையை குறைக்க சொன்னதற்கே 10 நிமிடமாக மந்திரம் ஓதுகிறாரே என கமெண்ட் அடித்தபடி பெண்கள் விழுந்து, விழுந்து சிரித்தனர். பூஜையை முடித்துக்கொண்ட அமைச்சரிடம் சார், இன்னும் பதில் சொல்லவில்லை. சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் பெண்கள் கேள்வி எழுப்பவே அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

The post சிலிண்டர் விலையை குறைக்க சொல்லி பாஜ அமைச்சரை ஓடவிட்ட பெண்கள்: பதிலளிக்க முடியாமல் 10 நிமிடம் சமஸ்கிருதத்தில் மந்திரம் appeared first on Dinakaran.

Related Stories: