வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரைஸ்மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்டம் முழுவதிலும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கும் நபர்கள் குறித்து விவரம் சேகரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி வாணியம்பாடி கச்சேரிசாலை பகுதியில் தட்சிணாமூர்த்தி(55) என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில்லில் அதிக அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர், நேற்று மதியம் ரைஸ் மில்லில் சோதனை செய்தனர். அப்போது ரைஸ் மில்லின் உள்ளே 30 மூட்டைகளில் சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், அரிசியை மீட்ட அதிகாரிகள் வாணியம்பாடி நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் ஒன்றையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தலைமறைவான ரைஸ் மில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தியை தேடி வருகின்றனர்.
The post ரைஸ்மில்லில் பதுக்கிய 1.5டன் ரேஷன் அரிசி பறிமுதல் வாணியம்பாடியில் பரபரப்பு வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக appeared first on Dinakaran.
