ஆசிய சாம்பியன்ஷிப் கபடி தொடரில் ஹாட்ரிக் சாம்பியன் இந்தியா

பூசன்: தென் கொரியாவின் பூசன் நகரில் 11வது ஆடவர் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடந்தது. இதில் இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்றன. இந்தியா தனது லீக் ஆட்டங்களில் தென் கொரியா,தைவான், ஈரான், ஜப்பான் அணிகளை தோற்கடித்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்நிலையில் எஞ்சிய ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா நேற்று காலை ஹாங்காங் அணியை 64-14 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஈரான் 70-13 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானை வென்றது.

தொடர்ந்து லீக் சுற்றில் இந்தியாவிடம் மட்டும் தோற்ற ஈரான் அணியும் இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது. இந்நிலையில் இறுதி ஆட்டம் நேற்று பூசன் நகரில் நடந்தது. லீக் சுற்றைப் போலவே இறுதி ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் தங்கள் அதிரடியை தொடர்ந்தனர். கேப்டன் பவன் ஷெராவத், அஸ்லாம் இனாம்தார், அர்ஜூன் ஜெய்ஸ்வால், தற்காப்பு ஆட்டக்காரர்கள் சுர்ஜித், பர்வேஷ், நிதின், நிதிஷ் ஆகியோர் சிறப்பான ஆட்டம் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 23-11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

லீக் ஆட்டத்தைப் போலலே ஈரான் வீரர்கள் 2வது பாதியில் வேகம் காட்டி புள்ளிகளை சேர்க்க ஆரம்பித்தனர். ஆனாலும் இந்தியாவை முந்த முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஈரான் சூப்பர் ரெய்டு நடத்தி லேசான எதிர்ப்பை காட்டியது. ஆல் அவுட் செய்யும் வாய்ப்பை ஈரான் வீரர் முகமதுரெசா இழக்க, அது இந்தியாவுக்கு ‘சூப்பர் டேக்கிளாக’ மாறி 2 புள்ளிகளை அள்ளித்தந்தது.அதனால் நடப்புச் சாம்பியன் இந்தியா 42-32 என்ற புள்ளிக் கணக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையை 3வது முறையாக கைப்பற்றி ஹாட்ரிக் சாம்பியன் ஆனது. அத்துடன் இந்தியா வெல்லும் 8வது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை இது.

The post ஆசிய சாம்பியன்ஷிப் கபடி தொடரில் ஹாட்ரிக் சாம்பியன் இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: