ஈரோடு: ஈரோடு மாவட்டம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.34.16 லட்சம் கையாடல் செய்து தலைமறைவான அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி கூட்டுறவு சொசைட்டி துணை பதிவாளர் கந்தராஜா கடந்த 15ம் தேதி ஈரோடு மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபியில் ஏ.ஏ.533 ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2018 ஏப்ரல் 1 முதல் 2021 அக்டோபர் 29ம் தேதி வரை நடந்த வரவு செலவுகளின் உண்மை தன்மையை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டது. இதில் சங்க துணை விதிகளுக்கு முரணாக, ரூ.34 லட்சத்து 16 ஆயிரத்து 295ஐ கையாடல் மற்றும் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதன்பேரில், ஈரோடு வணிக குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த சங்கத்தின் முன்னாள் தலைவரான அதிமுக நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி (48), முன்னாள் துணை தலைவர் அதிமுக நிர்வாகி பாலசுப்பிரமணியம் (46), சங்க செயலாளர் கோபி குள்ளம்பாளையம் மோகன் (52), துணை செயலாளர் ராஜகோபால் (56), சங்க எழுத்தர்களான சிவக்குமார் (46), வரதராசு (44), காசாளர் சோமசுந்தரம் (59) ஆகியோர் ரூ.34.16 லட்சத்தை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சோமசுந்தரம் இறந்துவிட்டார். மற்ற 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
The post கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.34.16 லட்சம் கையாடல் அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.