மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை ஆய்வு செய்தார். இன்று சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் ஆய்வு செய்தார். மேற்கண்ட ஆய்வின் போது, அமைச்சர் தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு பற்றி கேட்டறிந்தார்.

மேலும், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தின் முக்கிய பணிகளான மின் சுமை மற்றும் மின் உற்பத்தியை சமநிலை செய்து மின் விநியோகம் செய்தல், மாநில மின்கட்டமைப்பின் பாதுகப்பான திட்டமிடல் மற்றும் பொருளாதார செயல்பாடுகள், அதிர்வெண்ணை 49.90 Hz முதல் 50.05 Hz வரம்பிற்குள் பராமரித்தல், விலகல் வரம்பினை 200 மெகாவாட் வரம்பிற்குள் பராமரிப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தினை தடையின்றி வழங்குவதை கண்காணிப்பதற்கென பிரத்தியேகமாக இயங்கி வரும் (SCADA) கட்டுப்பாட்டு மையத்தினையும் ஆய்வு மேற்கொண்டு, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் மின் தேவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மாநிலத்தின் தற்போதைய மின்நுகர்வினை கருத்திற்கொண்டு எவ்வித தடங்கலுமின்றி அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் 24X7 மணி நேரமும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கிடவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு துரிதமாக செயல்பட்டு மின் பழுதுகள் ஏற்படின் அவற்றை உடனுக்குடன் சரி செய்து சீரான மின்சாரத்தினை பாதுகாப்பான முறையில் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் வழங்கிடவும் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

The post மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: