காலாப்பட்டில் மீனவர் வலையில் சிக்கிய பழங்கால சாமி சிலை

 

காலாப்பட்டு, ஜூன் 26: புதுச்சேரி காலாப்பட்டு அடுத்த சின்ன காலாப்பட்டு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (55). இவர் நேற்று காலை தனது பைபர் படகில் கனவா வலையுடன் மீன்பிடிக்க சென்றார். அப்போது பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு இடையே 15 மீட்டர் ஆழம் உள்ள நடுக்கடலில் வலையை போட்டு மீன்களை பிடித்து கொண்டு இருந்தார். அப்போது வலையை தூக்கிய போது வலையில் பெருமாள் உருவம் கொண்ட பழங்கால கற்சிலை சிக்கியது.

அந்த கற்சிலையை, ராமச்சந்திரன் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து கிராம மக்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கற்சிலையை காலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காலாப்பட்டு போலீசார், சிலையை உழவர்கரை தாசில்தாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மீனவர் ராமச்சந்திரன் கூறுகையில், கடந்த 30 ஆண்டு காலமாக கடல் தொழிலில் எங்கள் முன்னோர்கள் கூற்றுப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மலை போன்று வடிவம் கொண்ட இடத்தில் மீன்பிடிப்பது வழக்கம்.

அப்போது பலமுறை அந்த இடத்தில் வலை கிழிந்து சேதமாகி இருக்கிறது என்று கூறுவார்கள். இதை நான் கண்டு கொள்வதில்லை. ஆனால், நேற்று அதேபோல் எனது வலை மாட்டி சிக்கி சேதமடைந்தது. வலையை மேலே தூக்கி பார்த்தபோது பெருமாள் உருவம் கொண்ட கற்சிலை சிக்கியது. உடனே அதை கரைக்கு கொண்டு வந்தேன் என்றார். கடலில் சாமி சிலை கிடைத்தது சக மீனவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post காலாப்பட்டில் மீனவர் வலையில் சிக்கிய பழங்கால சாமி சிலை appeared first on Dinakaran.

Related Stories: