துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இலங்கையில் 9 போட்டிகளும் நடைபெறும் என்று செய்திகள் வெளியாயின. இதற்கு மற்ற நாடுகளும் ஒப்புதல் தெரிவித்திருந்த நிலையில், உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என தகவல் வெளியாகின. இதனால் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று ரசிகர்கள் நினைத்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த நஜீம் சேதி அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தற்போது அந்தப் பதவிக்கு அஷ்ரப் என்பவர் நியமிக்கப்பட உள்ளாராம். இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் அஷ்ரப் அளித்துள்ள பேட்டியில், “ஆசிய கோப்பைக்காக ஹைபிரிட் மாடல் என்ற முறையை ஆசிய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்திருக்கிறது. இதனை நான் நிராகரிக்கிறேன். ஆசிய கிரிக்கெட் சங்கம் பாகிஸ்தானுக்கு இந்த தொடரை நடத்த அனுமதி வழங்கியது. இதனால் நாங்கள் தான் இந்த தொடரை முழுமையாக நடத்துவோம். பூடான் அணியும் நேபால் அணியும் பாகிஸ்தானில் விளையாடுகிறார்கள். ஆனால் மற்ற பெரிய அணிகள் எல்லாம் இலங்கையில் விளையாடுவது போல் அட்டவணை அமைக்கப்பட்டிருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு செய்யும் அநீதியாகும். இதனால் இந்த முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்’’ என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் வரவில்லை என்றால் இந்த தொடர் 5 அணிகள் பங்கேற்கும் தொடராக இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா வந்து நாங்கள் விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் புது குண்டை தூக்கி போட்டுள்ளது. இதனால் உலககோப்பை தொடருக்கான அட்டவணை தயாராவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
The post ஆசிய கிரிக்கெட் வாரிய முடிவை நிராகரிப்பதாக அறிவிப்பு; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஆசிய கோப்பைக்கு சிக்கல்: புது குண்டை வீசுகிறார் அஷ்ரப் appeared first on Dinakaran.