மணிமங்கலத்தில் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஜூன் 22:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், மணிமங்கலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு மாதிரிப் பள்ளியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்து, மாதிரிப் பள்ளி வகுப்பினை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் பேசுகையில், ‘அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக, சிறப்பு திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவெடுத்துள்ளன. 2021-22ம் கல்வியாண்டில் 10 மாவட்டங்களில் 10 மாதிரி பள்ளிகளும், 2022-23ம் கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் 15 மாதிரிப் பள்ளிகளும் இக்கல்வியாண்டில் 13 மாவட்டங்களில் 13 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செயல்படக்கூடிய உண்டு உறைவிடப் பள்ளியாகும். இக்கல்வியாண்டில் இப்பள்ளியில் கீழ்க்கண்ட வகுப்புகளில் மொத்தம் 480 மாணவ – மாணவியருக்கு சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு என 450 மாணவ, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு சுவையான உணவும் பாதுகாப்பான சூழலும் உறுதிப்படுத்தப்படுகிறது. வகுப்பறை செயல்பாடுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு விடுதி கண்காணிப்பாளர்களை கொண்டு வழி நடத்தப்படுகிறது. மாணவர்களின் தனித்திறன் மற்றும் விருப்பமறிந்து பொதுத்தேர்விற்கும், போட்டி தேர்விற்கும் பங்கேற்க ஊக்கப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், விண்ணப்பித்தும், அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டும் உயர் கல்விக்கு உரிய பயிற்சி அளித்தும் வழி நடத்தப்படுகிறது.

அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயின்று முடிக்கும் வரை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மாதிரிப் பள்ளியில் பயின்று இந்திய அளவிலான முன்னணி உயர்கல்வி நிலையங்களில் பயிலும் முன்னாள் மாணவர்கள் அவ்வப்போது தங்களது அனுபவங்களை இம்மாணவர்களுடன் பகிர்ந்து தன்னம்பிக்கையோடு தனது குறிக்கோளை அடைய வாய்ப்பளிக்கப்படுகிறது. இறுதியாக, இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் தாங்கள் பெற்ற அனைத்து வாய்ப்புகளையும் தன்னைப் போன்று பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களை வழி நடத்தவும் ஊக்கப்படுத்தவும், சமுதாய முன்னேற்றத்திற்கும் திறம்பட செயல்படுபவர்களாகவும் திகழ்வார்கள். ஆகவே, இத்திட்டத்தினை மாணவ – மாணவியர்கள் சிறப்பாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தனலட்சுமி பொறியியல் கல்லூரி தாளாளர், அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர் கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாதிரி பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மணிமங்கலத்தில் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: