அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி

 

வடலூர், ஜூன் 19: கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நெய்வேலி ஊமங்கலம் என்.எல்.சி. ஜீரோ யூனிட்டில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனநந்தினி (31). எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ள இவர் தனது தாய் வீட்டின் மாடியில் குடியிருக்கும் செல்வமுருகன் மனைவி கவுசல்யா என்பவரிடம் தான் வேலைக்கு செல்ல விரும்புவதாகவும், ஏதாவது வேலை பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

அதன்பேரில் அவர்கள் மூலம் அறிமுகமான கிருஷ்ணவேணி என்பவர், தனக்கு தெரிந்தவர் மூலம் வேலை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அன்று சக்திவேலின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய நபர், தனது பெயர் இந்தியஸ்ரீ என்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிவதாகவும், தற்போது வங்கியில் தேர்வு இல்லாமல் சிபாரிசின் அடிப்படையில் அதிகாரி வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் உங்கள் மனைவிக்கு என்னால் வேலை வாங்கி தர முடியும். விருப்பம் இருந்தால் வேலை வாங்கி தருவதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என கூறினார்.

இதனை நம்பிய அவர், பல தவணைகளில் இந்திய ஸ்ரீக்கு, ரூ.9 லட்சத்து 14 ஆயிரத்து 996 அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட இந்தியஸ்ரீ வேலை வாங்கி தராமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து தனநந்தினி, கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனநந்தினி உள்பட 6 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சத்து 7 ஆயிரம் பெற்று, வடலூர் மாருதி நகரை சேர்ந்த இந்தியஸ்ரீ (30) மோசடியில் ஈடுபட்டதும், அவருக்கு குறிஞ்சிப்பாடி அடுத்த வரதராஜன்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் (29) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த செல்போன், சிம்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: